தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் சி.பசுபதிபாண்டியன் நினைவுநாள் வருகிற 10-ந் தேதி தூத்துக்குடி அலங்காரத்தட்டில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 11-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும், பிற பகுதிகளில் இருந்தும், விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஊர்வலமாக வருவதற்கும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வருதல், அன்னதானம் வழங்குவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்படுகிறது.
தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடக்க இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.