புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை. தூத்துக்குடிக்கு மட்டுமே சென்றேன். அங்கு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். மக்கள் கூறிய கருத்தை நான் வெளிப்படுத்தினேன். அது என்னுடைய கருத்து கிடையாது. மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என் சொந்த ஊர். நான் போட்டியிட்ட இடத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றேன்.
அமைச்சர் சேகர்பாபு கூறியது போல போட்டியிட செல்லவில்லை. தமிழக அரசில் தலையிட செல்லவில்லை. சபாநாயகர் அப்பாவு, இவர் யார் அங்கு ஆய்வு செய்வதற்கு? என கேள்வி எழுப்புகிறார். தி.மு.க.வை குற்றம்சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால் தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதை கூறினேன். என் சகோதர, சகோதரிகள் துன்பத்தில் பங்கேற்க ஆறுதலுக்காக சென்றேனே தவிர, ஆய்வுக்காக செல்லவில்லை. இதை தி.மு.க.வினர் கொச்சைப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசியல் கட்சியை விமர்சிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் குறித்து தமிழிசை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் மத்திய அரசு அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என கூறிப்பிட்டு இருந்தார். மேலும் ஒரு கவர்னர் அரசியல் செயல் குறித்து விமர்சித்துள்ளதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.