Tamilசெய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த மாமியார் கழுத்தை அறுத்து கொலை செய்த மருமகள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த புலிவனாந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 85). இவரது கணவர் சின்னத்தம்பி மூத்த மகன் செல்வம், 2-வது மகன் ராஜி (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்து விட்டனர். 3-வது மகன் சின்னப்பையன் பராமரிப்பில் காசியம்மாள் இருந்தார்.

யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மூதாட்டி காசியம்மாள் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமுதாய கூடத்தில் தனியாக வசித்தார். கடந்த 2-ந் தேதி இரவு காசியம்மாள் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது கம்மல் மூக்குத்தி என 1½ பவுன் நகைகள் இரும்பு பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காசியம்மாளுக்கும் அவரது மூத்த மருமகள் தேவகி (58) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தேவகியிடம் விசாரணை நடத்தினர். இதில் தேவகி இந்த கொடூர கொலையை செய்திருப்பது தெரிய வந்தது.

போலீசார் அவரை கைது செய்தனர். தேவகி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மாமியார் காசியம்மாள் பெயரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. எனது மகன் நரேஷ் செங்கல் சூளை நடத்தி பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு ரூ.4 லட்சம் கடன் உள்ளது.

அந்தக் கடனை அடைக்க எனது மாமியார் காசியம்மாளிடம் நிலத்தை பிரித்து எழுதி தருமாறு கேட்டேன். இதனால் அவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர் சொத்தை பாகம் பிரித்து தர முடியாது என கூறிவிட்டார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். கடந்த 2-ந் தேதி நள்ளிரவு வீட்டிலிருந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு மாமியார் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அவரது கழுத்தில் 3 முறை கத்தியால் குத்தினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அங்குள்ள கோவில் அருகே வீசிவிட்டேன். பின்னர் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.