பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.
கருணை மனுக்கள் மீதான ஜனாதிபதியின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் ஜனாதிபதிகளால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின் போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் சுப்ரீம் கோர்ட்டு, தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன.
அண்மைக்காலங்களில் கூட தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர். எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.