தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது ருத்ரன், அதிகாரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியானது. ‘துர்கா’ எனப் தலைப்பிடப்பட்ட அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். முதலில் இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் இயக்கவுள்ளதாக லாரன்ஸ் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்திலிருந்து விலகுவதாக அன்பறிவ் அறிவித்துள்ளனர். இதனை நீண்ட பதிவின் மூலம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்போடு இருந்த இப்படத்திலிருந்து இவர்கள் விலகியிருப்பது சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.