துரோகம் என்பது ஓ.பன்னீர் செல்வத்துடன் பிறந்தது – ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவி பொறுப்பு காலாவதியாகி விட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று தலைமைகழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான அதாவது 74 தலைமை கழக நிர்வாகிகள் உள்ள சூழ்நிலையில் 65 பேர் பங்கேற்றுள்ளனர். அது தவிர 4 பேர் தலைமை கழக கூட்டத்திற்கு வர இயலவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர்.
அவர்கள் உடல்நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்று கழகத்தில் கூறியுள்ளனர். 5 பேர் மட்டுமே தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ள நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்பது வருகிற 11.7.22 அன்று பொதுக்குழுவை கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் பல கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மிகவும் தெளிவாக 51 நிமிடங்கள் அ.தி.மு.க. சட்ட விதிகளை தெளிவாக எடுத்துக் கூறி உள்ளார். சட்ட விதி பிரிவு 20, 27-ல் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழ்நிலையில் கழகத்தை நடத்த தலைமை கழக நிர்வாகிகள் அதிகாரம் படைத்தவர்கள்.
அந்த அடிப்படையில் தான் இன்று தலைமை கழக நிர்வாகிகள் தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில் நாங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று இந்த கூட்டம் நடைபெற்றது. அடிப்படை விதியே ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியவில்லை என்றால் நான் என்ன சொல்வது? அவர் தெரிந்தும் தெரியாமல் இருக்கிறா? புரிந்தும் புரியாமல் இருக்கிறாரா? அறிந்தும் அறியாமல் இருக்கிறாரா?
தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை ஒரு காலத்திலும் எழுப்ப முடியாது. கட்சி அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட பேனரை மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. துரோகத்தின் தொடர்ச்சியான அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். அவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு எந்த அளவுக்கு துரோகம் செய்துள்ளார் என்பதை ஆர்.பி.உதயகுமார் எடுத்துக்கூறி உள்ளார்.
துரோகம் என்பது அவருடன் உடன்பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட நிலையில் அவரை கட்சி பத்திரிகையில் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ள முடியாது. வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எல்லா விஷயத்துக்கும் ஒருமனதாக முடிவு எடுக்கப்படும்.
பொருளாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பாரா? மாட்டாரா என்பதற்கு விடை பொதுக்குழுவில் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வத்தின் துரோகங்களுக்கு நிறைய உதாரணங்களை கூற முடியும். அ.தி.மு.க. கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை.
ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்பது தான் கட்சியின் ஒட்டுமொத்த நிலை. கட்சியின் ஆலோசனை கூட்டத்தை நடத்த தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.