Tamilசெய்திகள்

துருக்கி வழிபாட்டு தளத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

மேற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஐரோப்பாவிலும் பரந்து விரிந்திருக்கும் நாடு, துருக்கி. இதன் தலைநகரம் அங்காரா (Ankara). துருக்கியின் இஸ்தான்புல் (Istanbul) நகரில் உள்ளது 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சான்டா மரியா தேவாலயம்.

நேற்று காலை, வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக அங்கு வந்திருந்தவர்கள், மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமூடி அணிந்த 2 பேர் அந்த தேவாலயத்தின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். அப்போது உள்ளே நுழைந்த ஒருவரை அவர்கள் பின் தொடர்ந்தனர்.

இருவரும், திடீரென அவரை நோக்கி சுட்டனர். இதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார். சுட்டவர்கள் உடனே அங்கிருந்து தப்பி விட்டனர். தகவல் காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணையை தொடங்கினர். உயிரிழந்தவருக்கு 52 வயது என்றும், ஞானஸ்னானம் பெற இருந்தவர் என்றும் அவரது உறவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்தான்புல் நகர மேயர், எக்ரெம் இமாமொக்லு, “அமைதியான இப்பகுதியில் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானது. நமது நகரத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் மத வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.

துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், இத்தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார். பின்னர், துருக்கியின் உள்துறை மந்திரி, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பிடிபட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ரஷியர் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.