பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் நேற்று கலந்துரையாடினார். உலகின் மிகப்பெரிய காணொலி காட்சியாக கருதப்படும் இந்நிகழ்ச்சியில் தொண்டர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார்.
அப்போது மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்த தொண்டர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசியதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை நான் கழுவியதை எதிர்க்கட்சிகள் அரசியல் தந்திரம் என விமர்சனம் செய்கின்றனர். சுமார் 22 கோடி பேருக்கும் மேல் கும்பமேளாவில் புனித நீராடி இருந்தாலும் அப்பகுதி தூய்மையாக வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமாக துப்புரவு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களின் பாதங்களை கழுவினேன். இது மதிப்பின் வெளிப்பாடு.
இதை விமர்சிப்பவர்களுக்கு முழுமையாக என்னை பற்றி தெரியாது. நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, என் வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு 4-ம் நிலை ஊழியரை அழைத்து வருமாறு கூறினேன். அப்போது அதிகாரிகள் அழைத்து வந்தது ஒரு தலித் ஊழியர். அந்த ஊழியரின் மகள் கையில் பூஜை செய்த கலசத்தை நான் கொடுத்தேன். இது கலாசாரத்தின் ஒரு அங்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.