மதுரை கூடல்புதூர் அப்பாத்துரை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் குண சேகரன் (வயது48), கட்டிட காண்டிராக்டர்.
குணசேகரன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே குணசேகரன் படுக்கையில் இருந்து எழுந்து வந்து ஜன்னலை திறந்து பார்த்தார். 5 பேர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் குணசேகரன், நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் போலீஸ் அதிகாரிகள், ஒரு வழக்கு தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டியது உள்ளது என்று கூறினர்.
இதையடுத்து குணசேகரன் வீட்டு கதவை திறந்தார். 5 பேரும் உள்ளே நுழைந்தனர். அந்த சமயத்தில் 5 பேரில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து, நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள நகை-பணத்தை கொள்ளையடிக்க வந்துள்ளோம். மரியாதையாக பீரோ சாவியை கொடு என்று மிரட்டினான். பயந்துபோன குணசேகரன் சாவியை கொடுத்தார்.
மறுநிமிடமே கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 170 பவுன் நகை ரூ.2.80 லட்சம் ரொக்கத்தை வாரிச்சுருட்டினர். அதன் பிறகு குணசேகரனிடம், நீ ஒத்தக்கடை வங்கியில் வைத்திருக்கும் முக்கிய ஆவணங்கள் வேண்டும் என்று கூறி அவரை ஒரு காரில் கடத்தி சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும் சம்பவம் பற்றி வெளியே சொன்னால் குடும்பத்தோடு கொன்று விடுவோம் என்று மிட்டி குணசேகரனை ஒத்தக்கடையில் இறக்கி விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து குணசேகரன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குணசேகரன் அரசு ஒப்பந்தக்காரராக உள்ளார். எனவே தொழில் போட்டி காரணமாக யாராவது கூலிப்படை உதவியுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸ் என கூறி காண்டிராக்டர் வீட்டில் 170 பவுன் நகை, ரூ.2.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.