கௌதம் குமார் என்ற வாலிபர் சமீபத்தில் பீகாரில் அரசு பணியாளர் ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக இருந்தார். கடந்த புதன்கிழமை அன்று மூன்று அல்லது நான்கு பேர் பள்ளிக்கு வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள், துப்பாக்கி முனையில் கடத்தல்காரர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் கௌதம் குமாருக்கு ஏற்பட்டது.
கௌதம் குமார் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது, காணாமல் போன ஆசிரியரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்குவதற்கு முன், குமாரின் குடும்பத்தினர் புதன்கிழமை இரவே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கௌதம் குமாரின் குடும்பத்தினர் ராஜேஷ் ராய் என்ற நபர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். ராயின் குடும்பத்தினர் குமாரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவரின் மகள் சாந்தினிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருமண முன்மொழிவை ஏற்க மறுத்த குமார், உடல் ரீதியான வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலையில் உள்ள வாலிபர்களை கடத்தி சட்டவிரோதமாக கட்டாய திருமணம் செய்யும் ‘பகட்வா விவாஹா’ என்ற சம்பவங்கள் பீகாரில் அவ்வப்போது நடைபெறுகிறது.