துப்பாக்கி சூட்டில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபரை பார்த்து கூச்சலிட்ட மக்கள்
துப்பாக்கி கலாசாரம் என்பது அமெரிக்காவில் தொடர்ந்து பிரச்சனையாக இருந்து வருகிறது. பள்ளிகளில் துப்பாக்கிச்சூடுகள் நடப்பதும், அதனால் பலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினாலும் அரசு பெரிதும் இந்த சம்பவங்களில் கவனம் செலுத்துவதில்லை.
கடந்த மே 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்கு இன்று சென்றார். பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அவர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் இரங்கலும் தெரிவித்தார். பின் அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனையும் செய்தார்.
பிரார்த்தனை முடிந்து அவர் தேவாலயத்தில் இருந்து வெளியே வரும்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ” இந்த சம்பவம் குறித்து ஏதாவது செய்யுங்கள்” என ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்டனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர், “நிச்சயமாக , நிச்சயமாக” என தெரிவித்தபடியே நடந்து சென்று, அங்கிருந்து கிளம்பினார்.