துப்பாக்கி சூடு சம்பவம் – திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி இருந்தார். அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.

அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஜஜி நாகராஜன், எஸ்.பி.கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தையூரை சேர்ந்த சீனிவாசன் மருந்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools