நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார். படப்பிடிப்பு குழுவினருக்கு ருசியாக சமைத்து கொடுத்தும் பாராட்டு பெற்றுள்ளார். சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் வான்வெளி ஆராய்ச்சி குழு ஆலோசகராக பணியாற்றினார். ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு உதவி செய்தார். துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். சமீபத்தில் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலானது. இந்த போட்டியில் 3 பிரிவுகளில் அவர் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான பட்டியலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9-வது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் பிடித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.