X

துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது உயிரிழந்த 11 வயது சிறுவன் – புதுக்கோட்டை கலெக்டரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலை அருகேயுள்ள கொத்தமங்கலத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன்-பழனியம்மாள் தம்பதியின் மகன் புகழேந்தி (வயது 11). நார்த்தாமலையில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி பசுமலைப்பட்டி யில் உள்ள துப்பாக்கி சுடும் பயற்சி மையத்தில் இருருந்த பாய்ந்து வந்த தோட்டா சிறுவனின் தலையில் பாய்ந்தது. புதுக்கோட்டையில் முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

31-ந்தேதி மாலை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் குழுவினர் சிறுவன் தலையில் இருந்த குண்டை அகற்றினர். ஆனாலும் சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணியை விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிடப்பட்டது.

அவர் கடந்த 4 நாட்களாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் தமிழக போலீசாரும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறினர்.

சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்ட கோட்டாட்சியர் தண்டாயுதபாணி இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்தார்.

அதில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியது இன்சார்ட் ரக துப்பாக்கியாகும். அதில் இருந்து வெளியாகும் தோட்டா 600 மீட்டர் வரை மட்டுமே செல்லும் திறன் கொண்டது.

தமிழக போலீசார் பயன்படுத்தியது சாதாரண ரக ரைபிள் துப்பாக்கியாகும். அதிலிருந்து அதிகபட்சமாக 30 மீட்டர் வரை மட்டுமே குண்டு பாய்ந்து செல்லும். ஆனால் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கும், குண்டு பாய்ந்த சிறுவன் இருந்த இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 2 கிலோ மீட்டர் ஆகும். அப்படியானால் சிறுவன் மீது பாய்ந்தது எப்படி?

மேலும் சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அந்த குண்டை ஆய்வுக்கு அனுப்பி எந்த ரக துப்பாக்கியில் இருந்து வெளியானது என்று கண்டுபிடித்தால் மட்டுமே அடுத்தகட்ட விசாரணைக்கு செல்ல முடியும் என்று அந்த அறிக்கையில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை கலெக்டர் கவிதா ராமு மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே நார்த்தாமலை பகுதி மக்கள் இனிமேலும் இப்படி ஒரு துயர சம்பவம் நடக்காமல் இருக்கவும், வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்துள்ளனர்.