துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வசித்து வந்த இந்தியர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த குடு சாலிய கூண்டு (49) மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் (43) ஆவார்கள்.

இதில் குடு சாலிய கூண்டு தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர். கட்டிடத்தில் தீ பற்றி எரிவதை கண்ட குடு சாலிய கூண்டு தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற போது பலியானது தெரிய வந்தது. பலியான மற்றொருவரான இமாம் காசிம் அப்துல் காதர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர்.

இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த குடு சாலிய கூண்டு மற்றும் இமாம் காசிம் இருவரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools