துபாயில் 35 அடுக்குகளை கொண்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் 35 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடம் உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அருகே உள்ளது. போல்லார்டு லாக் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக கட்டிடத்தின் மேல் நோக்கி பரவியது. இதனால் கட்டிடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டிடம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துபாயில் உயரமான கட்டிடங்களில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. இதற்கு கட்டுமான பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு புர்ஜ் கலிபா அருகே ஓட்டல் மற்றும் வீடுகளில் தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தீ விபத்து ஏற்பட்ட 35 மாடி கட்டிடத்தின் உரிமையாளரான எமார் பிராப் பர்ட்டீஸ் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.