X

துபாயில் கார் நம்பர் பிளேட்கள் ஏலம்! – ரூ.122 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட் கின்னஸ் சாதனை படைத்தது

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் ஒன்று, அந்நாட்டில் உள்ள கார்களுக்கு பேன்சியான நம்பர் பிளேட்களை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஏலத்தை நடத்தினர்.

இந்த ஏலத்தில் ஏகப்பட்ட நம்பர் பிளேட்கள் இடம்பெற்றன. 10 இரட்டை இலக்க நம்பர்களான ஏஏ 19, ஏஏ 22, ஏஏ 80, ஓ 71, எக்ஸ் 36, டபிஎல்யூ 78, எச் 31, இசட் 37, ஜே 57 மற்றும் என் 41 ஆகிய நம்பர் பிளேட்டும், மற்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட்களான ஒய் 900, கியூ 22222 ஆகிய நம்பர்களும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் ஏஏ19 என்ற நம்பர் பிளேட் 4.9 மில்லியன் திராம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ10.92 கோடி)க்கு ஏலம் போனது. அடுத்ததாக ஓ 71 என்ற நம்பர் பிளேட் 2.150 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ4.79 கோடிக்கு ஏலம் போனது. கியூ 22222 என்ற நம்பர் பிளேட் 975,000 திராம்ஸ், அதாவது ரூ 2.17 கோடிக்கு ஏலம் போனது.

உலகிலேயே இதுவரை அதிக விலையில் ஏலம் போனது கடந்த 2008-ம் ஆண்டு ஏலம் போன 1ம் நம்பர் பிளேட் தான். அந்த நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ116.3 கோடி என்ற விலையில் ஏலம் போனது.

இந்நிலையில், இந்த ஏலத்தில் பி 7 என்ற நம்பர் பிளேட் 55 மில்லியன் திராம்ஸ் என்ற விலையில் ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ122.6 கோடிக்கு இந்த ஏலம் போயுள்ளது. இதுதான் தற்போது உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன நம்பர் பிளேட் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.

இந்த ஏலம் மூலம் வசூலான பணம் முழுவதும் அந்நாட்டின் 100 கோடி உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.