X

’துணிவு’ பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் மேலாளர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘துணிவு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதில் கலந்து கொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த தகவல் தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”ஒரு நல்ல படம் தானாக விளம்பரப்படுத்திக்கொள்ளும் . நிபந்தனையற்ற அன்புடன் அஜித்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.