உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்ட தேர்தலில் 6 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்தது.
மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் கடந்த 28-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. 2-வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவதற்காக பா.ஜனதா அரசு தீவிரவாத குழுக்களுக்கு ரூ.16 கோடி கொடுத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுக்கு மணிப்பூர் பா.ஜனதா அரசு ரூ.16 கோடியை விடுவித்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது. முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
வாக்காளர்களை அச்சுறுத்தியும், மிரட்டியும் ஊழல் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா முயன்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.