தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும்.
கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மதுவிற்பனை குறைந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அனைத்து பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன.
இந்த வருடம் மதுபானங்களை அதிகளவு விற்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் அதிகாரிகள் செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதுமான அளவு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டன.
இல்லை என்று சொல்லாத அளவுக்கு அனைத்து வகையான மதுபானங்களும் குவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி பண்டிகையன்றும் அதிகளவு விற்பனை ஆகும்.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.450 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
புதன்கிழமை (3-ந்தேதி) சென்னயில் ரூ.40.69 கோடியும், மதுரையில் ரூ.47.21 கோடியும், சேலத்தில் ரூ.43.27 கோடியும், திருச்சியில் ரூ.45.29 கோடியும், கோவையில் ரூ.36.75 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.
4-ந் தேதி சென்னையில் ரூ.47.71 கோடி, மதுரையில் ரூ.51.68 கோடி, சேலத்தில் ரூ.48.62 கோடி, திருச்சியில் ரூ.49.57 கோடி, கோவையில் ரூ.37.71 கோடி என மொத்தம் ரூ.239.81 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
2 நாட்களையும் சேர்த்து மொத்தம் சுமார் ரூ.450 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.
மற்ற மண்டலங்களைக் காட்டிலும் மதுரை மண்டலத்தில் அதிகமாக மதுவிற்பனை நடந்துள்ளது. அங்கு ரூ.98.89 கோடி மது விற்பனை நடந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் ரூ.88.40 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்றுள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த வருடம் மது விற்பனை குறைவாக நடந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.227.88 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.239.81 கோடிக்கும் என மொத்தம் ரூ. 467.69 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த வருடம் மது விற்பனை குறைந்ததற்கு பணப்புழக்கம் குறைந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் வருவாய் குறைந்ததே இந்த சரிவுக்கு காரணம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மதுபானங்களின் விலை உயர்வும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.