X

தீபாவளி சிறப்பு ரெயில் முன்பதிவு தொடங்கியது – நவம்பர் 10 ஆம் தேதிக்கான டிக்கெட் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்குமுன்பாக பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

நவம்பர் 9-ந்தேதி (வியாழக்கிழமை) செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. ஆன்லைன் மற்றும் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய ஏராளமானோர் ஆர்வமுடன் காத்திருந்தனர். முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

அதேபோல் நவ.10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. தென் மாவட்ட ரெயில்களில் புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்ததால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மீதமுள்ள ஒரு சில ரெயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் 200ஐ கடந்ததால் முன்பதிவு செய்ய காத்திருந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி உண்டாகியது. அதிகாலை 3 மணி முதல் கவுண்ட்டரில் டிக்கெட் பெற வரிசையில் நின்றவர்கள் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags: tamil news