தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
போலீஸ் கமிஷனர் உத்தரவுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
சென்னை நகரில் புரசைவாக்கம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் தியாகராயநகர் ஆகிய பகுதிகளில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 இடங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லவேண்டும்.
என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு செல்பவர்கள் பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லலாம். தியாகராயநகருக்கு செல்பவர்கள், ஜி.என். செட்டி ரோடு, வெங்கட்நாராயணா ரோடு போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவிட்டு செல்லவேண்டும். மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு சென்னை நகருக்குள் அனுமதி மறுக்கப்படும். வணிக உபயோகத்துக்காக சரக்குகளை ஏற்றிச்செல்லும் மினி கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால், மினி கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படும். கனரக வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும்.
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 10 ஆயிரம் அரசு பஸ்கள் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரை இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் எத்தனை இயக்கப்படும் என்பது குறித்து அதன் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
சென்னையில் கே.கே.நகர், தாம்பரம், கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 5 இடங்களில் இருந்து இந்த 10 ஆயிரம் அரசு பஸ்களும் புறப்பட்டுச் செல்லும். ஈ.சி.ஆர்.சாலை வழியாக செல்லும் பஸ்கள் கே.கே.நகரில் இருந்தும், திண்டிவனம் வழியாக செல்லும் பஸ்கள் தாம்பரத்தில் இருந்தும், நெல்லை, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லியில் இருந்தும், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.
இதுதொடர்பாக ஏற்கனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர்செய்ய பணியில் இருப்பார்கள். குறிப்பாக வெளி இடங்களுக்கு பஸ்கள் புறப்பட்டுச் செல்லும் இந்த 5 இடங்கள் உள்ள பகுதிகளில் 150 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.
ஆலந்தூர் பகுதிகளில் சாலையோரமாக நின்று பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது என்று ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு பஸ்களை நிறுத்தி ஏற்றிச்செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம். ஏதாவது பிரச்சினை என்றால், போலீசார் உடனடியாக விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.