X

தீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

வருகிற 27-ந்தேதி தீபாவளி பண்டிகை என்பதால் வாரத்தின் இறுதி விடுமுறை நாட்களான நாளையும், நாளை மறுநாளும் தி.நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக ரங்கநாதன் தெருவில் நெரிசல் காணப்படும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்சம்பவங்களில் பிக்பாக்கெட் திருடர்கள் ஈடுபடுவார்கள்.

இதையடுத்து தீபாவளி பண்டிகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தி.நகரில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

அப்போது பேட்டி அளித்த அவர், ‘‘பொதுமக்கள் நலன் கருதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இணை கமி‌ஷனர் சுதாகர், துணை கமி‌ஷனர் அசோக்குமார், உதவி கமி‌ஷனர்கள் கலியன், ஆரோக்கிய பிரகாசம், மகிமை வீரன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தி.நகரில் ஏற்கனவே 1092 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக மாம்பலம் ரெயில் நிலையம் அருகிலும், ரங்கநாதன் தெருவிலும், பஸ் நிலைய சந்திப்பு அருகிலும் 3 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்துக்குள் பிக்பாக்கெட் திருடர்கள் புகுந்தால் உடனடியாக இந்த கேமராக்கள் காட்டி கொடுத்துவிடும்.

3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்தபடி போலீசார் பைனாக்குலர் மூலமாக கண்காணித்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கேமராக்கள் பொருத்தப்பட்ட சீருடையில் பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலம் போலீசாரின் நடவடிக்கைகளை உயர் அதிகாரிகளும் தீவிரமாக கண்காணிக்க முடியும்.

இன்று முதல் தீபாவளி வரையில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தி.நகரில் மட்டும் இதற்காக 3 ஷிப்டுகளாக 1500 போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம்பெண்களை சீண்டுபவர்களை பிடிக்கவும் மாறுவேடத்தில் பெண் போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள்.

ஒலிபெருக்கி மூலமாகவும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். கொண்டுவரும் பொருட்களையும், தங்களுடன் அழைத்து வரும் குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: south news