சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் சில பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.
வருகிற பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், அண்ணாத்த படத்தை நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.