தீபாவளிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது
தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே பெரும்பாலான மக்களும் தங்களது சொந்த ஊர், சொந்த கிராமத்தில் கொண்டாடுவது வழக்கம். தலைநகர் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் வியாபாரம், தொழில், அரசுப்பணி, படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
அவர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள். இதனால் பண்டிகை காலத்தில் சிறப்பு ரெயில்களும், சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்படுவது வழக்கம். இதில் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை மேற்கொள்வார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதி வருகிறது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் வெள்ளிக்கிழமையான 21-ந்தேதியே சொந்த ஊர்களுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக ரெயிலில் செல்ல முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே அதாவது நாளை (23-ந் தேதி) முதல் ரெயில் முன்பதிவு சேவை தொடங்க உள்ளது. அதன்படி அக்டோபர் 21-ந்தேதி ரெயிலில் பயணிக்க விரும்புவோர் நாளை (வியாழக்கிழமை) முன்பதிவு செய்யலாம்.
அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய நாளை மறுநாள் (24-ந் தேதி), அக்டோபர் 23-ந்தேதி பயணம் செய்ய வருகிற 25-ந் தேதியும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு விடப்படும் ரெயில்களின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடும். இதனால் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள் ரெயில் கால அட்டவணையின்படி திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு தற்போது குறைவாக உள்ளதால் இந்தாண்டு தீபாவளிக்கு வழக்கம் போல அதிகளவில் மக்கள் சொந்த ஊர் செல்வர் என எதிர்பார்க்கிறோம். தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வோர், நாளை முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயணிகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து வருவதால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் தரத்தை சமீபத்தில் உயர்த்தி உள்ளோம். தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.