கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் சரக்கு ரெயில்கள், கார்கோ பார்சல் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு தெற்கு ரெயில்வேயிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் 13 சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே ‘ஆன்லைன்’ மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தென் மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, 3 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தீபாவளிக்கான முன்பதிவும் வேகமாக நடந்து வருகிறது. ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், வழக்கமான ரெயில் போக்குவரத்து எதுவும் தமிழகத்தில் தொடங்கவில்லை. அதனால் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்களிலே பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலில் நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. மேலும் எழும்பூர்-மதுரை (02637/02638) சிறப்பு ரெயிலில் 12-ந் தேதிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டது.
இதேபோல் தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, காரைக்குடி ரெயில்களிலும் தீபாவளி பண்டிகைக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கொரோனாவுக்கு மத்தியிலும் பொது மக்கள் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது வரை வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்காக ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கவில்லை. சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு கேட்டுக்கொண்டால், ரெயில்வே வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்’ என்றார்.