டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மூத்த வக்கீலும், வழக்கில் கோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டவருமான இந்திரா ஜெய்சிங் கூறுகையில், “நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஊடகங்களும் இணை விசாரணை நடத்துவதுபோல் தகவல்களை வெளியிடுகின்றன. எனவே இதற்கான நெறிமுறைகளை கோர்ட்டு வகுக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அமர்வு சில உத்தரவுகளை பிறப்பித்து கூறியதாவது:-
இது ஒரு உணர்வுப் பூர்வமான விஷயம். கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியமும், ஆறுதலும் அளிப்பதை விடுத்து அவர்களை தீண்டத்தகாதவர்களாக இந்த சமுதாயம் கருதுவது வேதனை அளிக்கிறது. பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரே அவரை ஒதுக்கி வைப்பது வருத்தம் தருகிறது.
மேலும் கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான சிறுமிகள், பெண்கள் என யாருடைய பெயரையும், அவர்களைப்பற்றிய விவரங்களையும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மறைமுகமாக கூட தெரிவிக்கக் கூடாது.
பாலியல் தாக்குதலால் மரணம் அடைந்த பெண்கள், சிறுமிகள் பற்றியும் கூட ஊடகங்கள் தகவல்கள் வெளியிடுவதை தவிர்க்கவேண்டும். போலீசாரும் பொதுவெளியில் இதை தெரிவிக்க கூடாது. அவர்களைப் பற்றிய ஆவணங்களை போலீசார் மூடி முத்திரையிட்டு மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
இதுபோல் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள், சிறுமிகளின் பெயர், விவரங்களை வெளியிடுவது சம்பந்தப்பட்ட பெண்களின் எதிர்கால வாழ்க்கையை பெரிதும் பாதிப்பதாக அமைந்துவிடும். எனவே இதில் கவனமாக நடந்த கொள்ளும் பொறுப்பு சமுதாயத்தில் அனைவருக்குமே உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.