Tamilசெய்திகள்

தி.மு.க-வில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒத்துக்கீடு!

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார்.

அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார். இந்தநிலையில் மீண்டும் ராகுல்காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணி தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணிவரை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதற்காக கனிமொழி எம்.பி. நேற்று இரவு உடனடியாக சென்னை புறப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 10 இடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தொகுதி பங்கீடுக்கான விவரமும் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *