Tamilசெய்திகள்

தி.மு.க.வினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சட்டசபையில் இன்று பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு வருமாறு:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளனர். ஸ்மாட் சிட்டி என்ற பெயரில் ஸ்மாட்டாக பல வி‌ஷயங்களை செய்துள்ளனர். அதுவும் சென்னை வெள்ளப் பெருக்குக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் ஆட்சியில் கொடநாடு கொலை, கொள்ளையில் தொடங்கி, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வரை நடந்ததை பட்டியல் இடலாம்.

குட்கா விற்பனையில் முத்திரை பதிப்பவர்களாக நீங்கள் திகழ்ந்தீர்கள். ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பு தனது கையில் கறை உள்ளதா? என்று பார்த்து பேசவேண்டும்.

அ.தி.மு.க. வினரை தேவை இல்லாமல் விசாரணைக்கு அழைத்து செல்வதாக அவர் கூறி இருக்கிறார். தப்பி ஓடிய ஒரு குற்றவாளி கடந்த 5-ந்தேதி கைது செய்யப்பட்டு விட்டார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க.வினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். அதே நேரத்தில் பயந்து நடுங்குபவர்களுக்கு எல்லாம் எங்களால் பாதுகாப்பு தர முடியாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. சிறப்பு வேட்டை நடத்தி 6,112 ரவுடிகளை கைது செய்துள்ளோம். 9,498 கஞ்சா வியாபாரிகளையும் சிறையில் அடைத்துள்ளோம்.

இப்படி தமிழக மக்களின் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். 5 ஆண்டுகளுக்குள் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். படிப்படியாக ஒவ்வொன்றாக சொன்னதை மட்டும் செய்யும் அரசாக இல்லாமல் சொல்லாததையும் செய்யும் அரசாக இந்த அரசு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.