அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்கள் தான் வாக்களிக்கிறார்கள். மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். 21 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும்.
தி.மு.க. எந்த முன்னேற்றத்தையும் வைத்து ஓட்டு கேட்கவில்லை. பணத்தை வைத்து ஓட்டு கேட்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எந்த அளவு விதிமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகம், பத்திரிக்கை நண்பர்கள் மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
எங்களைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு அருகதை இல்லை. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. 8 வழிச்சாலை திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது மவுனம் சாதிக்கின்றன.
மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகள் தானே? தி.மு.க. வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை அதற்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்திருக்கிறார்களா? தி.மு.க.வுடன் அங்கம் வகிக்கிற கூட்டணி கட்சிகள் அனைத்தும் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தி.மு.க.விற்கு ஒத்தூதி கொண்டிருக்கின்றன என குற்றம்சாட்டினார்.