தி.மு.க. ஆட்சி குறுநில மன்னர்களின் ஆட்சி – அண்ணாமலை தாக்கு

திருச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ‘சேவை முன்னேற்றம் ஏழைகளுக்கான ஆட்சி’ என்ற நிகழ்ச்சி மாவட்டந்தோறும் வருகிற 15-ந் தேதி வரை நடத்தப்படும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் வீடு இல்லாத ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.

கடந்த 2014-ம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி 2 ஜிகாவாட் ஆக இருந்த நிலையில் தற்போது 53 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. போலி ரேஷன்கார்டுகள் ஒழிப்பு கொரோனா காலக்கட்டத்தில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உள்ளது. ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பால் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளன.

மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் காங்கிரஸ் நேரடியாகவும், தி.மு.க. மறைமுகமாகவும் இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் குற்ற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது. தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளன.

தி.மு.க. ஆட்சி குறுநில மன்னர்களின் ஆட்சி, ஷெல் கம்பெனிகளை வளர்க்கக்கூடிய ஆட்சி. தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு என்று தனி இலவச எண்ணை ஆரம்பிக்க யோசித்து வருகிறோம். தமிழகத்தில் 2 துறையில் நடந்த ஊழல் பற்றிய விவரம் வருகிற 4-ந்தேதிக்குள் வெளியிடப்படும்.

இதுவரை காணாத ஊழலை இனி வரும் 2 ஆண்டுகளில் தமிழகம் காணப்போகிறது. பா.ஜனதா வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து தி.மு.க. தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பா.ஜனதாவின் நோக்கமல்ல.

புதிய கல்வி கொள்கை குறித்த புரிதல் அமைச்சர் பொன்முடிக்கு இல்லை. இதுகுறித்து அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்களை பா.ஜனதா பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools