X

‘தி கேரளா ஸ்டோரி’ விவகாரம் – மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம்’ திரையரங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமை என்று நீதிபதிகள் கூறிய நிலையில், தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மே 15 -ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.