தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி படம் வெளியாக உள்ள நுலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், திருமுருகன் காந்தி, கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது
சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான் என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார்.