திரையரங்கு உரிமையாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பாரதிராஜா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய ஒரு அபாயகரமான செயல் திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் இயங்குகிற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவீத வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவீத வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 சதவீத வசூலையும், அந்த படத்தை வினியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம். இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்த விகிதாசார முறை மட்டும் அமலுக்கு வருமானால், ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.

இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு, அதற்கு பின்னர் அந்த முடிவுகளை பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools