திருவோணம் பண்டிகை – அத்திகோலம் போட்டி மக்கள் மகிழ்ச்சி
கடவுளின் தேசம் என்று கொண்டாடப்படும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகை திருவோணம். இந்த ஆண்டு திருவோண பண்டிகை வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. சங்க கால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகும், வாமணர் அவதரித்த தினமாகவும் இந்நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழின் பத்துபாட்டு நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சியில் பாண்டிய நாட்டு மக்கள் இவ்விழாவை 10 நாட்களாக கொண்டாடியதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படி புராதன சிறப்புமிக்க இவ்விழா குறித்து கேரளாவில் பல்வேறு புராண கதைகள் கூறப்படுகிறது. அதில் முதன்மையானது மன்னன் மகாபலியின் ஆணவம் அடக்கிய வாமண அவதாரம் குறித்த கதையாகும். இக்கதையில் கேரளாவை ஆண்ட மன்னன் மகாபலி, மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவன். அதற்கேற்ப மக்களும் மன்னன் மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
மன்னரின் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றினர். நாட்கள் செல்ல செல்ல மன்னனின் குணம் மாறியது. அவனிடம் ஆணவமும், செருக்கும் குடி கொண்டது. மன்னரிடம் ஏற்பட்ட மாற்றம் கண்டு மக்கள் மனம் கலங்கினர். அவர்கள் இறைவனிடம் மன்னன் மகாபலியின், ஆணவத்தை அடக்குமாறு முறையிட்டனர்.
மக்களின் கோரிக்கையை செவிமெடுத்த இறைவன், மகாபலி மன்னனை அடக்க வாமண அவதாரம் எடுத்து அவனது நாட்டுக்கு வந்தார். குள்ள உருவத்துடன் முனிவர் போல் காட்சியளித்த அவர். மன்னன் மகாபலியின் முன்பு சென்று தனக்கு தானம் வேண்டுமென கேட்டார். மன்னனும், வாமணர் வேண்டும் வரம் தருவதாக வாக்களித்தார். அதை கேட்ட வாமணர், தனக்கு 3 அடி நிலம் மட்டும் வேண்டும் என கேட்டார். மன்னனும் அதனை தருவதாக கூறினார்.
மன்னன் கூறியதும் வாமணர் முதல் அடியை எடுத்து வைத்தார். அது மன்னனின் மொத்த நிலப்பரப்பையும் தாண்டியது. அடுத்த அடியில் விண்ணும் வசப்பட்டது. அடுத்து 3-வது அடியை எங்கு வைக்க வேண்டும் என வாமணன் தூக்கிய காலுடன் நிற்க, அதன்பின்புதான் மன்னன் மகாபலிக்கு தன்முன் நிற்பது முனிவர் அல்ல. இறைவன் என தெரிந்து கொண்டார். உடனே உள்ளம் உருகிய அவர், இறைவா என்னை மன்னித்து கொள் என்றபடி 3-வது அடியை தன் தலை மீது வைக்கும் படி கூறி சிரம் தாழ்த்தி நிற்பார். வாமணனும், 3-வது அடியை மன்னன் தலையில் வைக்க அவரது ஆணவம் அகன்றது. செருக்கும் அழிந்தது.
அதன்பின்பு மன்னன் மகாபலி, தன் தவறை மன்னிப்பாயாக என்று வாமணரிடம் கைதொழுது நின்றார். வாமணர் உருவில் வந்த இறைவன், மகாபலியை மன்னித்து அருள்வார். அப்போது மன்னன் தான் நேசிக்கும் மக்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்தித்து செல்ல அனுமதிக்க வேண்டும் என வரம் கேட்டார். வாமணரும், அவருக்கு வரம் அருளி மறைந்து விட்டார்.
இறைவன் அருளிய வரத்தால் மன்னன் மகாபலி ஆண்டுதோறும் மக்களை சந்திக்க வரும் நாள் தான் திருவோண திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா சாதி, மத பாகுபாடு இன்றி ஒன்று சேர்ந்து கொண்டாடப்படுகிறது. கேரளாவில் திருவோண பண்டிகை சிங்கம் மாதத்தில், அதாவது தமிழில் ஆவணி மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும். அன்று முதல் திருவோணம் வரை 10 நாட்கள் இத்திருவிழா கொண்டாடப்படும்.
2-ம் நாள் சித்திரை, 3-ம் நாள் சுவாதி, 4-ம் நாள் விசாகம், 5-ம் நாள் அனுஷம், 6-ம் நாள் திருக்கேட்டை, 7-ம் நாள் மூலம், 8-ம் நாள் பூராடம், 9-ம் நாள் உத்திராடம் திருவிழாக்களாக கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிடுவார்கள்.
முதல் நாளில் ஒரே விதமான பூக்களாலும், 2-ம் நாளில் 2 வித பூக்களாலும் பூக்கோலமிடும் அவர்கள் 10-ம் நாளான திருவோணம் அன்று 10 விதமான பூக்களால் கோலமிடுவார்கள். இது பார்க்கவே மனதை மயக்குவதாகவும், கொள்ளை அழகுடனும் இருக்கும். ஓணப்பண்டிகையை கொண்டாட கேரள மக்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் ஊருக்கு வந்து மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த பண்டிகையை கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் உற்சாகமின்றி நடந்த ஓணப்பண்டிகை இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளா முழுவதும் உற்சாகம் களைகட்டி காணப்படுகிறது. கேரளாவின் எல்லையையொட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். தக்கலை, குழித்துறை, குலசேகரம், திருவட்டார், களியக்காவிளை, மார்த்தாண்டம் என மேற்கு மாவட்ட பகுதிகள் முழுவதும் ஓணக்கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.