X

திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டி? – துரைமுருகன் விளக்கம்

கருணாநிதி மறைவு காரணமாக அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சித்தலைவராக இருந்து வரும்நிலையில், அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், ‘நாளை (இன்று) தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம் தொடர்பாக விவாதித்தோம். நீங்கள் கூறும் விஷயம் குறித்து நாங்கள் பேசவில்லை’ என்றார்.