Tamilசெய்திகள்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

கேரளாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையிலும், 5.15 முதல் 6.15 மணி வரையிலும், காலை 8.30 முதல் 10 மணி வரையிலும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.15 மணி வரையிலும், 6.50 முதல் 7.20 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரே நேரத்தில் 15 பக்தர்கள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.

இதேபோல் குருவாயூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு உத்தரவுபடி குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 300 பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் பக்தர்கள் நாலம்பலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதே போல் திருமணம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு திருமணத்தில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்ச்சிகளில் வீடியோ, புகைப்படம் எடுக்க 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு எத்தனை திருமணங்கள் வரை நடத்தலாம் என்பது குறித்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதே சமயத்தில் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.