X

திருவண்ணாமலை மகா தீபத்தை 40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதி முன்பு அதிகாலை 3.40 மணியளவில் சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை ஏற்றினர்.

பின்னர், அந்த தீபத்தை வெளியே கொண்டு வந்து, 5 விளக்குகளை ஏற்றினர். தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது. மாலையில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர். மாலையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்தார்.

தொடர்ந்து, தங்க கொடிமரம் முன்புறமுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டதும், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மாலை 6 மணியளவில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. பருவதராஜ குல சமூகத்தினர் மகா தீபத்தை ஏற்றி வைத்தபோது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர். பரணி தீபம் மற்றும் அர்த்த நாரீஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 40 லட்சம் பக்தர்கள் மகா தீபம் தரிசித்தனர். மகாதீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Tags: tamil news