X

திருவண்ணாமலை காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – நிர்வாகி கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் தங்கியிருக்கும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக குழந்தைகள் காப்பகங்களில் இருந்து சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அப்போது காப்பகத்தில் உள்ள நிறை குறைகள் குறித்து சிறுமிகளிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அதன்படி ஏராளமான சிறுமிகள் தங்கள் அனுபவங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து எழுதி கொடுத்தனர்.

அதில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செயல்பட்ட அருணை குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சிறுமிகள் சிலர், தங்களுக்கு காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறினர். காப்பக நிர்வாகி, அடிக்கடி தங்களை காப்பகத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, ஆபாச படங்களை பார்க்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், ஒரு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல்களால் அதிர்ச்சியடைந்த கலெக்டர் கந்தசாமி நேரடியாக களத்தில் இறங்கினார். சக அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் நேற்று அந்த காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் காப்பக நிர்வாகி வினோத் குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காப்பகம் சீல் வைக்கப்பட்டு, அதில் தங்கியிருந்த 19 சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 3 காப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags: south news