தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முருகுமாறன் போட்டியிட்டார். இதில், 87 ஓட்டுகள் அதிகம் பெற்று முருகுமாறன் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொல்.திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தபால் ஓட்டுகளின்போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் ஓட்டுகளுடன் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி ஆர்.முத்துக்குமாரசுவாமி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘காட்டுமன்னார்கோவில் தேர்தல் அதிகாரியாக இருந்த முத்துகுமாரசுவாமி ஓய்வு பெற்றுவிட்டதாக கூறினார். இதையடுத்து நீதிபதி, நிராகரிக்கப்பட்ட 102 தபால் ஓட்டுகளுடன் தற்போதைய தேர்தல் அதிகாரி வருகிற 20-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.