அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ் ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த உற்சவங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கொரோனா தொற்று கால கட்டத்தில் இதுபோன்ற கல்யாண உற்சவத்தை காணாமல் பக்தர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் கொரோனா தற்போது கட்டுக்குள் உள்ளதால் தேவஸ்தானம் அமெரிக்காவில் 5 நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டது. அதன்படி அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் சீனிவாச கல்யாணம் நடைபெற்றது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஜூலை 5-ஆம் தேதி வரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகின்றது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.