தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்கி அதனைத் தூய்மைப்படுத்துவதுடன் மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான பழங்கள், மருத்துவ மூலப்பொருட்கள் முதலியவற்றை வழங்கி பறவைகளுக்கு வசிப்பிடமாகவும் திகழ்கின்றன.
சமீப காலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது அந்த நாளின் சிறப்பை நினைவு கூரும் வகையில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது.
எனவே விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில், தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த தரமான நடவுச்செடிகள், பழச்செடிகளை மலிவு விலையில் வழங்கி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் (டான்ஹோடா) 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன.
இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும்.
அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரக்கன்றுகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் 2019-20-ம் ஆண்டு மட்டும் 4 லட்சத்து 56 ஆயிரத்து 930 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுப நிகழ்ச்சிகளுக்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து குறைந்த விலையில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதவிர ‘இ-தோட்டம்’ செயலி வாயிலாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.