Tamilசினிமாதிரை விமர்சனம்

திருமணம்- திரைப்பட விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சேரன் இயக்கியிருக்கும் குடும்ப படமான ‘திருமணம்’ எப்படி என்பதை பார்ப்போம்.

இளம் ஜோடி உமாபதி ராமையாவும், காவ்யா சுரேஷும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி பிறகு காதலர்களாகி உடனடியாக திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமண வேலைகளிலும் இறங்கிவிடுகிறார்கள்.

ஜமீன் குடும்பத்தை சேர்ந்த உமாபதி ராமையாவின் அக்கா சுகன்யா, தனது ஒரே தம்பி உமாதிபதியின் திருமணத்தை ஊரே அசந்து போகும் அளவுக்கு தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். திட்டம் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அரசு ஊழியரான சேரன், தனது தங்கை காவ்யா சுரேஷின் திருமணத்தை எளிமையாக நடத்தி, திருமண செலவை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இவர்களது இந்த முரண்பாட்டால், திருமணமே நின்று போய்விடுகிறது. இதனால் இளம் ஜோடிகள் மனம் உடைந்துபோக, அவர்களால் பெரியவர்களும் வருத்தப்பட, இறுதியில் இந்த பிரச்சினை எப்படி தீர்வு கண்டு திருமணத்தை நடத்துகிறார்கள், அது என்ன தீர்வு, என்பது தான் ‘திருமணம்’ படத்தின் மீதிக்கதை.

”வீட்டை கட்டிப்பார், கல்யாணத்த பண்ணிப்பார்” என்ற பழமொழி சொல்பவர்களுக்கு, ”வீடு என்பது பல வருடங்கள் நாம் வாழப்போவது, ஆனால், கல்யாணம் என்ற வைபவம் ஒரு நாள் கூத்து தான், அதற்கு பல லட்சங்களை செலவு செய்வது, வீண் செலவு”, என்ற மெசஜை இயக்குநர் சேரன் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் பல லட்சங்கள் செலவு செய்து திருமணம் செய்ய, அதுவே பிற்காலத்தில், திருமணம் என்றால் இப்படி தான் செய்ய வேண்டும் என்று யாரோ ஒருவர் உருவாக்கிய மாயையாகி, தற்போது அதற்கு மயங்கி, பலர் கடனாளியாகி வருவதை காட்சிகளினாலும், வசனங்களாலும் எடுத்துரைக்கும் சேரன் இயக்குநராகவும், நடிகராகவும் நமக்கு பாடம் நடத்துகிறார்.

அன்பான அண்ணனாக. அதே சமயம் வாழ்க்கை என்றால் திட்டமிடல் வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு சராசரி மனிதராக தனது வேடத்தை உணர்ந்து நடித்திருக்கும் சேரன், எப்போதும் முகத்தில் ஒருவித சோகத்தை உலவவிட்டிருப்பது நம்மையும் சோகமாக்கிவிடுகிறது. இருந்தாலும், அவர் பேசும் வசனங்களும், அவரது அந்த அப்பாவியான முகமும் கூட சில இடங்களில், அவர் சொல்வது அனைத்தும் சரி தான், என்று ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான அம்சங்களாக அமைந்து விடுகிறது.

ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருக்கும் சுகன்யா, தம்பிக்காக உருகுவது, சேரனின் கெடுபிடிகளுக்கு அடங்கி போய், பிறகு ஆக்ரோஷமாவது என்று தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

உமாபதி ராமையாவின் நடிப்பும், நடனமும் இயல்பாக இருக்கிறது. ஆனால், அவரது ஹெர் ஸ்டைல் தான் ரொம்ப பழசாக இருக்கிறது. அதையும் அவர் இயல்பாகவே வைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் தமிழர்களின் மனதில் இடம் பிடிக்கும் ஹீரோவாகலாம்.

நாயகி காவ்யா சுரேஷை பார்த்தவுடனே பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும். அதிலும், சில பிரேம்களில் மட்டுமே. ஆனால், அவரது நடிப்பும் பரத நாட்டியமும் நம்மை ஈர்த்துவிடுகிறது.

தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், ஜெயப்பிரகாஷ் என்று படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.

காதல் திருமணமோ அல்லது பெற்றோர்கள் நிச்சயம் செய்யும் திருமணமோ, தற்போதைய காலக்கட்டத்தில் நிலைத்து நிற்பதில்லை, மாறாக விவாகரத்து என்ற பிரிவினையே அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் இருப்பதாக சொல்லும் இயக்குநர் சேரன், அந்த மூன்று பிரச்சினைகளும் இல்லற வாழ்வில் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சொல்யூஷனை சொல்வதோடு, திருமணத்தில் செய்யப்படும் செலவுகளை குறைத்து, அதை வாழ்க்கைக்கு உதவும் பொருளாதாரமாக மாற்றிக் கொள்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை அட்வைஸாக சொன்னாலும், அதை அழகாக சொல்லியிருக்கிறார்.

சேரனை போல பலர் நிஜத்திலும் எளிமையை விரும்பினாலும், அவர்களை அவ்வாறு வாழ விடாமல், உலகத்துடன் ஒத்து வாழ வேண்டும் என்று அனைவரும் செல்லும் வழியில் அழைத்து செல்லும் சில சராசரி பெண்கள் நிச்சயம இந்த படத்தை பார்த்தாக வேண்டும்.

திருமணம் குறித்து மட்டும் அல்ல, திருமணத்தை தொடர்ந்து குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அவற்றின் முடிவு என்னவாக இருக்கும் என்று இப்படத்தின் திரைக்கதையை வாழ்க்கைக்கான அகராதியாகவே இயக்குநர் சேரன் வடிவமைத்திருக்கிறார்.

இத்துடன் இயற்கை விவசாயம், பெண்களின் பேராசைகளினால் ஆண்கள் பாதிக்கப்படுவது, உணவை வீணடிப்பது என்று பல வகையான நல்ல விஷயங்களையும் மெசஜாக மட்டுமே அல்லாமல், நாம் சிரித்து ரசித்து கேட்கும்படியாகவும், அதை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் சொல்லிய இயக்குநர் சேரன், இந்த படத்தின் மூலம் மீண்டும் தனது விஸ்வரூபத்தை எடுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

பிள்ளைக்கோ, மகளுக்கோ திருமணம் ஏற்பாடு செய்பவர்கள், தங்களது சம்மந்தி வீட்டாருடன் சேர்ந்து இப்படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு பல லட்சங்கள் மிஞ்சமாவதோடு, அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் வலமாக இருப்பது உறுதி.

சித்தார்த் விபினின் இசையில் பாடல்களும், ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் சுமார் என்றாலும், கதைக்கு தேவையானதை கச்சிதமாகவே கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் களமும், திரைக்கதை நகரும் விதமும் ஏதோ சீரியல் போல இருக்கிறது, என்று சிலர் மனதில் தோன்றினாலும், சீரியலில் கூட சொல்லாத பல நல்ல விஷயங்கள் இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக உள்ள இந்த ‘திருமணம்’ அனைவருக்கும் நல்ல பாடம்.

-ஜெ.சுகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *