நடிகை ஹன்சிகா, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹன்சிகா குறுகிய காலத்தில் 50 படங்களை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மகா என்ற படம் வெளியானது. அது ஹன்சிகாவின் 50-வது படமாகும். அதில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த தொழில் அதிபர் தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா தற்போது தமிழில் நடிகர் ஆதியுடன் இணைந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள நடிகை ஹன்சிகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த படத்தில் நான் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது மிகவும் எனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. திருமணத்திற்கு பிறகு நான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் 5 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகும் நான் படங்களில் நடிக்க எனது கணவர் ஆதரவு அளித்து வருகிறார். அவர் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். அவர்தான் என் முதல் ரசிகர். எனது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. அவை நிறைவேறும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன்.
தமிழில் நான் 51-வது படத்தில் நடித்து முடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பேட்டியின் போது நிருபர்கள் ஹன்சிகாவிடம், நீங்கள் நிஜ வாழ்க்கையில் யாராக மாற விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த போது, “நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனாக மாற விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.