Tamilசெய்திகள்

திருப்பூர் மாவட்ட அரசு பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாமளாபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்-ஆசிரியை உள்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 1,037 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்றிரவு வெளியானது. இதில் ஒரு மாணவி மற்றும் 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது.

மேலும் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து 220 மாணவர்கள், 11 ஆசிரியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 8 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து பல்லடம் தனியார் பள்ளி மற்றும் திருப்பூர் மாநகராட்சி பள்ளி இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 15 மாணவர்கள், 9ஆசிரியர்கள், ஒரு வட்டார கல்வி அலுவலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரவலையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதார குழுவினர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.