திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன.
இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் துடித்தனர்.
விபத்துகுறித்து அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினர்க்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் சிலர் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.