Tamilசெய்திகள்

திருப்பூரில் நகைக்கடையை உடைத்து 375 பவுன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை

திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் யூனியன் மில் ரோடு பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார்.

நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் ஜெயகுமார் கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்ததுடன் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகள்- வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 375 பவுன் நகைகள் மற்றும் 9கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமி‌ஷனர் அரவிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் நகைக்கடையில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் நகைக்கடையில் பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடையின் உரிமையாளர் ஜெயக்குமாரின் வீடு கடையின் பின்புறம் உள்ளது. முன்பு அங்கு தங்கியிருந்து கடையை கவனித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து விட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் குடியேறினார். நேற்றிரவு கடையின் பின்புறமுள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அந்த வீடு வழியாக கடைக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். தனிப்படையும் அமைக்கப்பட உள்ளது.

நகைக்கடைக்குள் புகுந்து 375 பவுன் நகை, 9கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் மாநகர வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் இன்று கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடை அமைந்துள்ள யூனியன் மில் ரோடு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளையர்களின் அடையாளத்தை காண கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.