திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்தசில நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு இருந்த இலவச தரிசன டோக்கன் கடந்த வாரம் முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை இலவச தரிசன டோக்கனை பெற பக்தர்கள் அலிபிரி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ் முன்பு அதிகளவில் கூடினர். இதனால் பக்தர்கள் முண்டியடித்ததால் பிரச்சினை ஏற்பட்டது. அதை தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் ஆலோசனை நடத்தி கூடுதல் டோக்கன்கள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி இதுவரை தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு வந்ததை 3-ந்தேதி முதல் 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை விடுத்து நேரக்கட்டுப்பாடு இன்றி யார் எப்போது வந்தாலும் இலவச தரிசன டோக்கன் இருக்கும் நாள்களில் அதை முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசித்துச் செல்லலாம்.
2 நாட்களுக்கு பிறகு தரிசனம் கிடைத்தாலும் பக்தர்கள் அதைப் பெற்றுக் கொண்டு 2 நாட்கள் திருப்பதியில் தங்கி ஏழுமலையானை தரிசித்துச் செல்ல தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்களிடையே வரவேற்பும் கிடைத்துள்ளது.