Tamilசெய்திகள்

திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி மாற்றம் – புதிய முகவரி வெளியிடப்பட்டுள்ளது

திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயரை மாற்றியுள்ளது. திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிக்கெட் கிடைத்து வந்தது. இதில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்த இணையதளத்தை சிலர் போலியாக பயன்படுத்தினர். குறிப்பாக தரிசன டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு புகார் வந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, ஐ.டி. துறை பொது மேலாளர் சந்தீப் ரெட்டி ஆகியோர் கலந்து ஆலோசித்தனர்.

திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போலியான செயலியை உருவாக்காமல் மாற்ற முடிவு செய்தனர். தற்போது தேவஸ்தான இணையதள முகவரி “ttdevasthanams.ap.gov.in” என மாற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான தரிசனங்கள், தங்கும் வசதிகள், நன்கொடைகள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோவில்களின் சேவைகள் மற்றும் அம்சங்கள் இந்த அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கிடைக்கும்.

பக்தர்கள் இனிமேல் புதிய இணையதளம் மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும். திருப்பதி தேவஸ்தானத்தில் ஆதாரங்களின்படி, ஒரே இணையதளம், ஒரே பயன்பாடு என்ற தலைப்பின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் வெளியிட்டவுடன் பலர் திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரியை போலியாக பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதலாக ஆன்லைன் டிக்கெட்களை வெளியிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.