திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி நடக்கிறது. அதையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்க உள்ளது. அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. 27-ந்தேதி கொடியேற்றம், 1-ந்தேதி கருடசேவை, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி தேர்த்திருவிழா, 5-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. பிரம்மோற்சவ கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி திருமலைக்கு வந்து மூலவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து முதல் நாள் இரவு 9 மணியளவில் வாகனச் சேவை தொடங்குகிறது. வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரையிலும் நடக்கிறது. தமிழ் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை கருடசேவை வருவதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஆலோசனை நடத்தப்படும்.
பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மற்றும் பிற சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தில் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசன டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கான தரிசனம் மற்றும் பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.
தனியாக வரும் புரோட்டோக்கால் வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டுமே பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி லட்டு பிரசாதங்கள் வழங்கப்படும். இதற்காக லட்டு பிரசாதம் இருப்பு வைக்கப்படும்.
பாதுகாப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர், திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி ஆகியோர் கூட்டாக கோவிலின் நான்கு மாட வீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாடவீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பாதுகாப்பு தேவைக்காக காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
திருமலையில். 24 மணி நேரமும் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு மைய அறை அமைக்கப்படும். பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகள், தரிசன வரிசைகள் மற்றும் இதர என்ஜினீயரிங் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலிபிரியில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்படும்.
தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்படும். கோவில் மற்றும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்படும். பக்தர்களுக்கு சேவை செய்ய 3,500 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். புகைப்பட கண்காட்சி மற்றும் மலர், கலை கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும். சுகாதாரத்துறையின் கீழ் தூய்மைப் பணியில் தீவிர கவனம் செலுத்தப்படும். அதற்காக, கூடுதலாக 5 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள்.
மருத்துவத் துறையின் கீழ் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடங்களில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். திருமலை முழுவதும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக, கருடசேவை அன்று கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். நடைபாதையில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க, கருடசேவை அன்றும், மறுநாள் மதியம் 12 மணி வரை திருப்பதி மலைப்பாதைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்படும்.
உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் வாகனச் சேவை தொடர்பாக இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும். திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி கூறுகையில், பிரம்மோற்சவ விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். மாவட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்படும். முழுமையான செயல் திட்டத்தை தயார் செய்து மீண்டும் ஒருமுறை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலரை சந்தித்து இதுபற்றி தெரிவிப்போம், என்றார்.